கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் பிர்பும் பகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்தவர் பது ஷேக். கடந்த மார்ச் 21-ம் தேதி இவரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்தனர். இதையடுத்து, பது ஷேக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போக்டுய் கிராமத்தில் 9 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பது ஷேக் கொலைக்கு பழி வாங்கவே 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்தார். ஆனால், 9 பேர் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மார்ச் 25-ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், திரிணமூல் கட்சி பிரமுகர் பது ஷேக் கொலை குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா தலைமையிலான அமர்வு விசாரித்து, திரிணமூல் பிரமுகர் கொலை குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. பது ஷேக் கொலைக்கும், 9 பேர் எரித்துக் கொல்லப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதால், இரண்டையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.