சர்ச்சை:
சென்னை ராயப்பேட்டை பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையில், சுகாதாரம் இல்லாத கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது என்றும் இதனால், அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சர்ச்சை கிளம்பியது.
சென்னை நகர் பகுதியில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையும் ஒன்று. புகாரின் உண்மை நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று பார்த்தோம். மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அருகே அந்த கிணறு இருந்தது. நாம் அங்குச் சென்று பார்த்த போது அந்த கிணற்றில் செடிகொடி முளைத்தும், கிணறு முழுவதும் குப்பையாகவும் காணப்பட்டது.
மருத்துவமனையின் விளக்கம்:
இந்த தண்ணீர் தான் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, ராயப்பேட்டை மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ) மருத்துவர் அனந்த் பிரதாபிடம் பேசினோம். “அந்த கிணறு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அந்த கிணற்று நீரை மருத்துவமனைக்குப் பயன்படுத்துவதே கிடையாது. தீவிர தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சமயங்களில் பயன்படும் என்று பராமரித்து வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த கிணற்றிலிருந்த அனைத்து தண்ணீரையும் வெளியேற்றினோம். மழைக்காலத்தில் மீண்டும் தண்ணீர் அளவு ஏறிவிட்டது. அந்த கிணற்றுத் தண்ணீர், எதிர்பாராதவிதமாகத் தீவிபத்து ஏற்பட்டால் பயன்படுத்தத் தனி ஒரு தொட்டியில் நீர் நிரப்பப்படும் வசதி உள்ளது. அதுபோக, தற்போது இந்த பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணியில் அவர்கள் அவசரத்துக்கு அந்த தொட்டியில் விடப்படும் கிணற்று தண்ணீரை எடுத்துக்கொள்வார்கள்” என்று கூறினார்.
மருத்துவமனைக்கு எந்த தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதை நமக்குக் காட்ட நம்முடன் நேரடியாக வந்தார். “இந்த மருத்துவமனையில் நான்கு தொட்டி உள்ளது, இந்த நான்கிலும் மெட்ரோ வாட்டர் மூலமாகவே தண்ணீர் நிரப்பப்படுகிறது” என்று கூறினார். மேலும், அந்த நான்கு தண்ணீர் தொட்டி உள்ள இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டோம். “கிணற்றுத் தண்ணீர் வரும் தொட்டிக்கும் மற்ற நான்கு தொட்டிக்கும் சம்பந்தம் இல்லை” என்பதை விளக்கினார்.
இந்த நான்கு தொட்டிகளுக்கு எப்படி தண்ணீர் வருகிறது, அந்த மெட்ரோ நீர் எப்படி வார்டுகளுக்கு அனுப்பப்படுகிறது என்பதையும் விளக்கினார். மேலும், அந்த மருத்துவமனையில் அங்கங்கே குடிநீர்த் தேவைக்காகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிந்தது. அங்குள்ளவர்கள் சொல்லும் விளக்கம் ஒருபுறமிருக்க ஆர்.எம்.ஓ அலுவலகம் இருக்கும் பிரிவு முதல் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ள கழிவறைகளில் உள்ள பைப்புகளில் வரும் தண்ணீர் எப்படி இருக்கிறது நாம் பார்வையிட்டோம்.
ஆர்.எம்.ஓ அலுவலகம் முதல் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் ஒரே மாதிரியான தண்ணீர் வருவதை நம்மால் காணமுடிந்தது. அதே நேரத்தில், அந்த மருத்துவமனையில் உள்ள கிணறு சுகாதாரம் இல்லாத நிலையில் தான் காணப்பட்டது. அந்த கிணற்று நீர் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் அதனைச் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது!