பிரித்தானியாவில் மாவோயிஸ்ட் குழு ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன், சொந்த மகளை 30 வருடங்களாக சிறைபிடித்திருந்த நபர் சிறையில் மரணமடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் என்ஃபீல்டு பகுதியில் வசித்து வந்த அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்பவரே சிறையில் 23 வருட தண்டனையை அனுபவித்து வந்துள்ளார்.
தமது ஆதரவாளர்களிடையே தோழர் பாலா என அறியப்பட்டுவந்த இவர் தமக்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக கூறியதுடன், ஆதரவாளர்களை மூளைச்சலவை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறார் மீது கொடுமை, பாலியல் துஸ்பிரயோகம், தண்டனை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக கடந்த 2016ம் ஆண்டு சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை அவர் சிறையிலேயே மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட அவர் மீதான விசாரணையின் போது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனது ஆதரவாளர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது அம்பலமானது.
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், 1970களில் லண்டனில் குழு ஒன்றை தொடங்கி, தமக்கான ஆதரவாளர்களை திரட்டியுள்ளார்.
மேலும், தமது மகள் Katy Morgan-Davies என்பவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின் போது, தாம் அடிக்கடி தாக்கப்பட்டதாகவும், நர்சரி ரைம்கள் பாடுவதற்கும், பள்ளிக்குச் செல்வதற்கும் அல்லது நண்பர்களை உருவாக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டதாகவும் Katy Morgan-Davies நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கேரளாவில் பிறந்த பாலகிருஷ்ணன், சிங்கப்பூரில் வளர்ந்ததுடன், 1963ல் லண்டன் திரும்பியுள்ளார்.
பின்னர், கல்லூரி படிப்பின் இடையே அரசியலில் ஈடுபட்டதுடன், 1970களில் தமது தலைமையில் விசித்திர கோட்பாடுகளுடன் ஒரு குழுவையும் உருவாக்கியுள்ளார்.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது 81 வயதில் பாலகிருஷ்ணன் சிறையிலேயே மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.