புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான் தீவிராவதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கசாப் என்பவன் மட்டும் சிக்கினான். அவர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தூக்கில் போடப்பட்டான். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு தலைவன் ஹபீஸ் சையத் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஹபீஸ் சையத்தின் மகனும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத குழுவின் முக்கிய தலைவனுமான ஹபீஸ் தல்ஹா சையத்தை ஒன்றிய அரசு தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஹபீஸ் தல்ஹா சையத் (46), பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ ெதாய்பா தீவிரவாத அமைப்பின் பல்வேறு மையங்களுக்கு சென்று வந்துள்ளான். இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் இந்தியாவிற்கு எதிராக பிரசாரம் செய்துள்ளான். ஹபீஸ் தல்ஹா சையத் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிய அரசு கருதுகிறது. சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் அவன் தீவிரவாதியாக அறிவிக்கப்பட வேண்டும். எனவே, கடுமையான சட்டத்தின் கீழ் அவன் தனிநபர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான்,’ என்று கூறப்பட்டுள்ளது.