மைசூரு : “அரக ஞானேந்திரா, லாயக்கில்லாத உள்துறை அமைச்சர். இவரிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக ராஜினாமா கடிதம் பெற வேண்டும்,” என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரில் இளைஞர் கொலை வழக்கில் முன்னுக்கு பின் முரணாக பேசினார். உளவுத்துறை உள்ளது;
போலீஸ் துறை உள்ளது. சரியான தகவல் தெரிந்துகொள்ளாமல், உள்துறை அமைச்சர் எப்படி பேசினார்?அரக ஞானேந்திரா, லாயக்கில்லாத உள்துறை அமைச்சர். இவரிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை, உடனடியாக ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.தொடர்பு மொழியாக ஹிந்தியை பயன்படுத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தாய் மொழி விஷயத்தில் அவர் தலையிடக்கூடாது. பலவந்தமாக ஹிந்தியை திணிப்பதை, நாங்கள் எதிர்க்கிறோம். இது கூட்டமைப்பு நடைமுறைக்கு எதிரானது.ஹிந்தி தேசிய மொழியும் அல்ல; தொடர்பு மொழியும் அல்ல. பிரதமர் மோடி வாயை திறந்தால், ‘கோ ஆப்பரேடிவ் பெடரலிசம்’ என்கிறார். ஹிந்தி மொழியை நாங்கள் ஏற்கமாட்டோம். கர்நாடகாவில் கன்னடம், தமிழகத்தில் தமிழ், கேரளாவில் மலையாளம் தாய்மொழியாக உள்ளது.
விலை உயர்வை பற்றி, யாரும் பேசுவதில்லை. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தங்கள் தோல்வியை மூடி மறைக்க, தார்மிக விஷயங்களை விவாதமாக்குகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement