மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் நேற்றுமுன் தினம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணயத்தில் இருந்து ரஷியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இருந்து சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் 93 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 25 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்பட 58 நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் எங்களுக்கு எதிராக வாக்களுக்கு எதிராக வாக்களிக்க எங்கள் நட்பு நாடுகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் எங்களுக்கு எதிராக வாக்களிக்க எங்களின் பல நட்பு நாடுகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.