புதுடில்லி-பிரிட்டன் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக்கிற்கு, அந்த நாட்டின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது மனைவி அக் ஷதா, வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், ரிஷி சுனாக்கிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நிதியமைச்சராக இருப்பவர் ரிஷி சுனாக். இவர் மனைவி, அக் ஷதா மூர்த்தி, ‘இன்போசிஸ்’ நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள். கருத்துக் கணிப்புகடந்த மாதம் பிரிட்டனில் எடுத்த கருத்துக் கணிப்பில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ரிஷி சுனாக்கிற்கு உள்ளதாக, 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரிஷி சுனாக் வருமான வரியை உயர்த்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ‘பிரிட்டனில் வரியை உயர்த்திய ரிஷி சுனாக், தன் மனைவியின் வெளிநாட்டு வருவாய்க்கு வரி வசூலிக்காதது ஏன்?’ என, ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன.அக் ஷதாவுக்கு, 7,500 கோடி ரூபாய் மதிப்பில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் உள்ளன. இவை, பிரிட்டன் ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பை விட அதிகம். இந்தப் பங்குகள் வாயிலாக வரும் ‘டிவிடெண்ட்’ வருவாய்க்கு, பிரிட்டன் சட்டப்படி அக் ஷதா வரி செலுத்த தேவையில்லை. மக்களின் அதிருப்திஎனினும் இந்த விவகாரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தியதால், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் உட்பட, தனக்கு கிடைக்கும் அனைத்து வருவாய்க்கும் விரைவில் வரி செலுத்துவதாக, அக் ஷதா அறிவித்தார். அப்போதும் ஊடகங்கள் விடவில்லை. அவை, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பிரிட்டன் உள்ள நிலையில், இன்போசிஸ் நிறுவனம் மாஸ்கோவில் தொடர்ந்து இயங்குவதை சுட்டிக் காட்டின.
இதையடுத்து, ரஷ்யா கிளையை இன்போசிஸ் மூடி விட்டது.எனினும் இந்த நடவடிக்கைகளால் ரிஷி சுனாக் மீதான மக்களின் அதிருப்தி குறையவில்லை. சமீபத்தில் எடுத்த கருத்துக் கணிப்பில் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ரிஷி சுனாக்கிற்கு உள்ளதாக, 12 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்து உள்ளனர். ஒரே மாதத்தில் மனைவியின் வரி விவகாரத்தில், 23 சதவீத ஆதரவை ரிஷி சுனாக் இழந்துள்ளார். இதனால், அவருக்கு பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு மங்கியுள்ளது.
Advertisement