தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கல்குவாரியில் வேலைபார்க்கும் குருவம்மாள் என்ற மூதாட்டி கால் வலிக்கு சிகிச்சை மேற்கொள்ள கோவில்பட்டி அரசு மருத்துமனைக்கு சென்றுள்ளார். குருவம்மாள் வலது காலில் தீராத வலியால் அவதிப்படு வந்த நிலையில், வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முருகவேல் விசாரணை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மூதாட்டி குருவம்மாளை அழைத்து பரிசோதித்த பின்னர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து மூதாட்டிக்கு தவறாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் சீனிவாசகன், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக துணை இயக்குனர் முருகவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 நாட்களில் துறை ரீதியாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு மருத்துவர் சீனிவாசகன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வலது காலில் முதல் அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்திருப்பது அலட்சியத்தின் உச்சம் என்றும் இது போன்ற பொறுப்பற்ற செயலில் ஈடுபட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.