தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தரையில் இருந்து தாக்க கூடிய ஏவுகணைகளை வழங்க முயற்சித்த ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய யாகுசாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர் மற்றும் மூன்று தாய்லாந்து ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தரையிலிருந்து வான்நோக்கி தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நியூயார்க்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அமெரிக்காவிற்கு எப்படி வந்தனர் என்பதை நீதித்துறை விளக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.