வீட்டுக்கு வீடு கங்கை திட்டம்| Dinamalar

பெங்களூரு : ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும், ‘வீட்டுக்கு வீடு கங்கை’ என்ற திட்டத்தின் கீழ், இந்தாண்டு இறுதிக்குள் கர்நாடகாவின் 97 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் விளக்கும் வகையில் வாரம் ஒரு அமைச்சர், தங்கள் துறை சாதனைகள் குறித்து மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்துக்கு வந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தும்படி அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வகையில், கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று கூறியதாவது:ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும், ‘வீட்டுக்கு வீடு கங்கை’ என்ற திட்டம் 2020 ல் துவக்கப்பட்டது. கர்நாடகாவின் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளன.மத்திய அரசு 3,325 கோடி ரூபாயும், மாநில அரசு 2,323 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 31 மாவட்டங்களின் 46 தாலுகாக்களில் தண்ணீர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 18 ஆயிரத்து 600 சுத்தமான குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் துவக்குவதற்கு முன் மாநிலத்தின் 25 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்தது. தற்போது, 46 சதவீதம் வீடுகளுக்கு உள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் 97 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.மாநிலத்தின் 32 லட்சம் குடும்பங்கள், மஹாத்மா காந்தி தேசிய கிராமிய கட்டாய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். கூலியாக, 3,957 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளோம். நாளொன்றுக்கு 309 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது.கிராமங்களில் துாய்மை பணிக்காக, 2021 – 22 ல், 2,468 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதில், 2,211 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 18 மாதங்களில் 5,623 நுாலகங்கள் புதிதாக அமைக்கப்பட்டது.பிரதமர் சாலை திட்டத்தின் கீழ், 5,612 கி.மீ., தொலைவுக்கான சாலை மேம்படுத்தப்பட்டது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், கடந்தாண்டு முதல் 1,500 கிராம பஞ்சாயத்துகளில் ‘அம்ருத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டுள்ளது.துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநிலத்தின் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டிகொடுக்கப்பட்டது. ஆனாலும் சிலருக்கு, செம்பு பிடித்து திறந்த வெளியில் சென்றால் தான் நிம்மதி. மக்களின் மன நிலை மாற வேண்டும். சுய உதவி குழுக்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.