சென்னை: தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால், காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்தை முன்னிலைப்படுத்து அக்கட்சி இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வடமாநிலத்தவர்களால் குற்றங்கள் அதிகரித்து வருவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னையைச் சுற்றியமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடமாநில மாணவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டது, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நகைக் கொள்ளை நிகழ்வுகளிலும், பல இடங்களில் ஏடிஎம் மற்றும் வங்கிக் கொள்ளை நிகழ்வுகளிலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டது, கூலிப்படையாக தமிழகம் வந்து கொலைகளை நிகழ்த்திய வட இந்தியர்கள் விமானம் ஏறி தங்கள் மாநிலங்களுக்குச் சென்றது, கோவை உள்ளிட்ட பல இடங்களில் குடி போதையில் பெண்கள், குழந்தைகளிடம் தவறான முறையில் வட மாநிலத்தவர்கள் நடந்து கொண்டது என தொடர்ந்து இதுவரை பல்வேறு குற்றங்கள் வடமாநிலத்தவர்களால் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
அக்குற்றங்களின் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால், காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. குற்ற நிகழ்வுகள் நடக்கும் போது மட்டும், வெளி மாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு காவல் துறையினர், இவர்களை முறையாகக் கண்காணிப்பதற்கான நிரந்தரப் பொறியமைவு எதனையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, மண்ணின் மக்களின் மீது தாக்குதல் நடத்தி வந்த வடமாநிலத்தவர்கள், தற்போது காவல்துறையினர் மீதே தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.
தமிழினத்தின் அரசுரிமையை மறுக்கின்ற மத்திய அரசு, வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்குவித்து வளர்த்து, தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகின்றது. தமிழின அழித்தொழிப்பிற்கு அச்சாரமாக தமிழக மண்ணில் ஆதிக்கம் செய்யும், பாஜக-வின் பின் புலத்துடன் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் மூலமாக, குஜராத், உத்தரப்பிரதேசத்தை போன்று மதவெறி கலவரங்களை உருவாக்கி, அதை அரசியலாக்கி அதன் வாயிலாக, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்து மொத்த மண்ணின் மக்களை சிறுபான்மையாக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொடுத்த தைரியத்தின் காரணமாக தான், கோவை, திருப்பூரில் இந்தியில் பிரச்சாரம், திருப்பூரில் கலவரம் ஆகிய குற்ற நிகழ்வுகள் அரங்கேறியது. அதன் மற்றொரு சிக்கல் தான், காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலும். எனவே, தமிழகத்திற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் குவித்து காணப்படுகின்ற வடமாநிலத்தவர்களை கண்காணிக்க, காவல்துறையில் தனி பிரிவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். கடந்த 2000ம் ஆண்டு குற்றப் பின்னணி கொண்ட 1,16,782 வெளி நாட்டவரை அமெரிக்கா, அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது. பின்னர் 2011ம் ஆண்டு, பல மடங்கு அதிகரித்து சற்றொப்ப 3 லட்சத்து 96,906 வெளி நாட்டவர்களை அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது அமெரிக்கா. அதுபோன்று, குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்ற வடமாநிலத்தவர்களை, தமிழகத்தை விட்டு வெளியேற்றவும் தமிழக அரசு முன் வர வேண்டும்.
தமிழகத்தில் வேலைக்கு ஒட்டிய வயிரோடு வருகிறான், குறைந்த கூலிக்கு வருகிறான் என்று சிலர் வக்காலத்து வாக்குவதை பொருட்படுத்தாமல், தமிழகத்திற்கு வரும் வட மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று ஆகியவை வழங்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
மேலும், வெளியாரை வெளி யேற்றுவதென்பது வெறும், தமிழர்களின் வேலை-வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல, அது தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை என்பதையும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.