ஸ்ரீநகர்:
கடந்த 2019 அன்று, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்துச செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களால் ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மசூதி மூடப்பட்டது.
மேலும் கொரோனா தொற்று காரணமாகவும் அந்த மசூதி தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்ததால், மசூதியில் ஜமாஅத் தொழுகையை மீண்டும் தொடங்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
நேற்று அந்த மசூதியில் 24,000 பேர் தொழுகை நடத்தினர். அதில் ஒரு சிலர் தேச விரோதமாக கோஷங்களை எழுப்பியதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 13 பேரை கைது செய்தனர்.
மசூதிக்குள் தேச விரோத கோஷம் எழுப்பிய விவகாரத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மசூதி நிர்வாகம் அதை தடுக்க முயன்றதாகவும், ஸ்ரீநகர் எஸ்எஸ்பி ராகேஷ் பல்வால் தெரிவித்தார்.
இது திட்டமிட்ட சதி என்றும், ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் அவர் கூறினார். தேசத்திற்கு விரோதமாக கோஷமிட்டவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.