திண்டுக்கல்: “கடந்த 10 மாதங்களில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன” என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்கபெருமாள் கோயில், தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயில், திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதையடுத்து உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியுடன் பழநியில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, பழநியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், தண்டாயுதபாணி நிலையத்தில் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வினபோது இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் குமரகுருபரன், திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.
தாடிக்கொம்பில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியது: “கடந்த 12 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொள்ளாத கோயில்கள், திருப்பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையாமல் உள்ள கோயில்களில் பணிகளை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. கோயில்கள் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு ரூ.100 கோடி நிதியை நடப்பு நிதியாண்டில் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
பழநியில் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பத்து கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி துவங்கியது முதல் 10 மாத காலங்களில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களின் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக வட்டாட்சியர்களை பணி நியமனம் செய்துள்ளோம். இவர்கள், கோயில் சொத்துகளை கண்டறிந்து வருகின்றனர். அறநிலையத் துறைக்கு சொந்தமான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு அத்துமால் கல் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் 48 கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை என்ற நடைமுறையை கொண்டு வந்திருக்கிறோம். தொடர்ந்து படிப்படியாக தமிழ் அர்ச்சனை பிற கோயில்களிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சுவாமி சிலைகளில் இதுவரை 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவை எந்தெந்த திருக்கோயில்களை சேர்ந்தவை என கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இறைவனையே ஒரு கும்பல் சிறைப்பிடித்ததை மீட்டு, தற்போது இறைவன் மகிழ்ச்சியாக இருக்கும் நல்ல சூழ்நிலை நிலவுகிறது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.