பெங்களூரு : ”கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது,” என சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:கர்நாடகாவில், 18 வயதுக்கு மேற்பட்டோர், ஏப்ரல் 10 முதல் தனியார் தடுப்பூசி மையங்களில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெறலாம். 18 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்று, ஒன்பது மாதம் முடிந்திருந்தால், பூஸ்டர் டோஸ் பெறலாம்.தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி அரசு, முக்கியத்துவம் தருகிறது.
இதற்காகவே தடுப்பூசி போடுவதை, மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டில் இதுவரை 185 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., அரசும் கூட, தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தியுள்ளது. இதுவரை 10.47 கோடி டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்கள், கொரோனா பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது.மாநிலத்தில்
இதுவரை, 15 வயதுக்கு மேற்பட்ட, 5 கோடியே 23 லட்சத்து 5 ஆயிரத்து 424 பேருக்கு முதல் டோஸ்; 4 கோடியே 97 லட்சத்து 8 ஆயிரத்து 909 பேருக்கு, இரண்டாவது டோஸ் போடப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட 4 கோடியே 97 லட்சத்து 96 ஆயிரத்து 148 பேருக்கு முதல் டோஸ்; 4 கோடியே 76 லட்சத்து 60 ஆயிரத்து 33 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.தடுப்பூசி போடுவதில், மாநிலம் வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. மத்திய அரசு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும். இரண்டு டோஸ்களை போன்று, பூஸ்டர் டோசும் முக்கியமானது. கொரோனா விதிமுறைகளை பின் பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement