புதுடெல்லி:
மேகாலயா மாநில கவர்னராக சத்யபால் மாலிக் இருக்கிறார். 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் அம்மாநில பொறுப்பை ஏற்றார்.
75 வயதான சத்யபால் மாலிக் 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார். அப்போது அவருக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்தது. இதை சத்யபால் மாலிக்கே தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
2 கோப்புகள் எனது பரிசீலனைக்கு வந்தன. இதற்கு ஒப்புதல் அளித்தால் ஒவ்வொன்றுக்கும் ரூ.150 கோடி என்னால் பெற்று தர முடியும் என்று ஒரு செயலாளர் என்னிடம் தெரிவித்தார். 5 குர்தா பைஜாமாக்களை காஷ்மீருக்கு கொண்டு வந்துள்ளேன். அதோடு திரும்பி செல்கிறேன் என்று கூறி அதை நிராகரித்தேன்.
இவ்வாறு சத்யபால் மாலிக் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த விழாவில் தெரிவித்து இருந்தார்.
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களால் இந்த லஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டது என்றும் அதில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனும், மற்றொன்று இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் ஒருவருடன் தொடர்புடையது என்றும் சத்யபால் மாலிக் கூறி இருந்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணையை சத்யபால் மாலிக் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்தது குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன். அப்போது ஊழலில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறி பிரதமர் என்னை ஆதரித்தார். இது தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறேன்.
எனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தெரியும். விசாரணையின் போது அவர்களின் பெயரை வெளியிடுவேன். 2 பேரங்களையும் நான் ரத்து செய்து விட்டேன். எனக்கு எதிராக எந்த விசாரணையும் இல்லை.
அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டங்களை பகிரங்கமாக ஆதரித்ததால் என்னை குறி வைக்கிறார்கள். விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன். விசாரணைக்கு உதவ கூடுதல் தகவல்களை வழங்குவேன்.
நான் பயப்படவில்லை. விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன். பயப்பட மாட்டேன். ஓய்வுக்கு பிறகு விவசாயிகளின் பிரச்சினைகளில் தொடர்ந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்… இந்தியாவை பிடித்திருந்தால் பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்- இம்ரான் கானுக்கு, மரியம் நவாஸ் வலியுறுத்தல்