சென்னை: “ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்கிறது. ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உரிய சட்ட ஏற்பாடுகளை செய்து, 2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும்“ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று முந்தைய ஆட்சியில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி சட்டப்படி மத்திய அரசு தகுதித் தேர்வை கட்டாயம் ஆக்கியுள்ளது. இத்தகுதி தேர்வு எழுத, கால அவகாசம் கோரிய ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது.
நான்கு லட்சம் ஆசிரியர்களின் பத்தாண்டுக்கும் மேலான பணித் தொடர்ச்சி, அதில் அவர்கள் பெற்றுள்ள திறன் மேம்பாடு ஆகியவற்றை உயர் நீதிமன்றத் தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை. இந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பால் நான்கு லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்கிறது.
ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உரிய சட்ட ஏற்பாடுகளை செய்து, 2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.