நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேனி – அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 19 வார்டுகளை திமுக கைப்பற்றியது. அதிமுக -7, அமமுக -2, காங்கிரஸ்-2, சுயேச்சை -2 மற்றும் பாஜக -1 ஆகிய இடங்களையும் பிடித்தன. இதையடுத்து நகர்மன்ற தலைவர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கிய நிலையில், தலைமையின் அறிவிப்பை மீறி திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் தங்கள் பதவிகளை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டும் தனது பதவியை ரேணுப்பிரியா ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில் தேனி – அல்லிநகரம் நகராட்சியின் முதல் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக நகர பொறுப்பாளரும், 20 ஆவது வார்டு கவுன்சிலருமான பாலமுருகன் உட்பட 8 திமுக கவுன்சிலர்கள், 2 அமமுக கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
அதில் நகராட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் செல்வம் உள்ளிட்ட 10 திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள், 2 சுயேச்சைகள், ஒரு பாஜக கவுன்சிலர் என மொத்தம் 22 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.
இக்கூட்டத்தில், தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின் சட்ட விதிகளுக்குட்பட்டும், உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி அனுமதி பெற்று முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீரப்ப அய்யனார் கோவில் சாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி உள்ளிட்ட திட்டங்களுக்கான 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், சொத்து வரி சீராய்வது அவசியம் என்று தமிழக அரசு கொண்டு வந்துள்ள உத்தரவு குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமமுக உறுப்பினர்கள் ஜெயா, செல்வி ஆகிய இருவர் வெளிநடப்பு செய்து பாதியிலே புறப்பட்டு சென்றனர். இதையடுத்து அவசரக் கூட்டத்தில் 4 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
ரேணுப்ரியா தலைவராக பொறுப்பேற்ற பின்பு தனது முதல் பணிகளை துவங்கினார். முதற்கட்டமாக தேனியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். பின்னர் தேனி புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைய உள்ள அறிவுசார் நூலகம் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பாரஸ்ட் ரோடு 5 ஆவது தெருவில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார் பின்னர் துப்புரவு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
தேனி-அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் உத்தரவை மீறி தலைவராக ரேணுப்ரியா செயல்படமாட்டார் என கட்சியினர் பேசி வந்தனர். அதேவேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் திட்டப்பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்ட வேளையில் தேனி நகராட்சி மட்டும் எவ்வித செயல்பாடுகளும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட காலதாமத்திற்கு பிறகு நகர்மன்ற தலைவராக ரேணுப்ரியாத தனது பணியை தொடங்கிவிட்டார். ஆனால் முதல் கூட்டத்திற்கே திமுக கவுன்சிலர்கள் உள்பட 22 பேர் வராததால் போதிய ஒத்துழைப்பு கிடைக்காமல் நகராட்சியை நிர்வகிக்க சிரமம் ஏற்படலாம்.