பீகார்
திருடர்கள்தான் நாட்டிலேயே “பெஸ்ட் டெக்னிக்கல் திருடர்கள்” என்ற பெயரைப் பெற்றுள்ளனர். 60 அடி நீள இரும்புப் பாலத்தை பட்டப் பகலில் அப்படியே பெயர்த்துக் கொண்டு போயுள்ளது ஒரு திருட்டுக் கும்பல். பீகாரை மட்டுமல்லாமல் நாட்டையே அதிர வைத்துள்ளது இந்த திருட்டுச் சம்பவம்.
பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள நஸ்ரிகஞ்ச் என்ற ஊரில் அமியவார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அர்ரா கால்வாயின் குறுக்கே கடந்த 1972ம் ஆண்டு ஒரு இரும்புப் பாலம் அமைத்தனர். அந்தப் பாலம் சமீப காலமாக அதிகமாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்தப் பாலத்திற்கு வியாழக்கிழமையன்று டிப்டாப் உடையுடன் ஒரு கும்பல் வந்தது. தங்களை நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட அவர்கள் ஜேசிபி இயந்திரங்கள், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றுடன் வந்தனர். கேஸ் கட்டரையும் கையோடு எடுத்து வந்திருந்தனர். ஆய்வு செய்வதாக கூறிக் கொண்ட அவர்கள் அந்த பாலத்தை அப்படியே பெயர்த்தெடுத்துள்ளனர். பின்னர் அதை லாரியில் போட்டு எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.
அவர்கள் போன பிறகுதான் ஊர் மக்களுக்குத் தெரிந்தது, வந்தது அதிகாரிகள் அல்ல, மாறாக திருட்டுக் கும்பல் என்று. இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரைப் பெற்று அதிர்ச்சி அடைந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது இரும்புப் பாலம் இருந்த அடையாளமே தெரியாத வகையில் மொத்தமாக பெயர்த்தெடுத்துக் கொண்டு போயிருந்தனர் திருடர்கள்.
என்ன கொடுமை என்றால், தங்களது திருட்டுத்தனத்திற்கு, உள்ளூர் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளையும், கிராம மக்களையும் கூட இந்த திருட்டுக் கும்பல் பயன்படுத்தியதுதான். அவர்கள் கண் முன்னால்தான் பாலத்தை அவர்கள் பெயர்த்துள்ளனர். சரி ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள்தானே என்று அத்தனை பேரும் தேமே என்று நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
பாலத்தை 3 நாட்களாக பெயர்த்துள்ளனர். அப்படி இருந்தும் யாருக்கும் சந்தேகமும் வரவில்லை. இதுகுறித்து யாரும் விசாரிக்கவும் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து நீர்ப்பாசனத்துறை இளநிலைப் பொறியாளர் அர்ஷத் கமல் சம்சி கூறுகையில், இந்த பாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பலரும் இதை சுரண்டி எடுத்து வந்தனர். இதனால் பாலம் ஆங்காங்கே சேதமடைந்து கிடந்தது. மொத்தமாக இதை அப்புறப்படுத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் திருடர்கள் முந்திக் கொண்டு விட்டனர் என்றார்.
என்னவோ போடா மாதவா.. நாடு எங்கே போய்ட்டிருக்குன்னே தெரியலை!