கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாட்டில், சிறப்பு விருந்தினராகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். தனது உரையின் தொடக்கத்தில் மலையாளத்தில் பேசினார் ஸ்டாலின். “தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் உள்ளது திராவிட கம்யூனிச உறவு என்பது 80 ஆண்டுகால வரலாறு கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக என் பெயர் ஸ்டாலின்” என்றார்.
பின்னர் மத்திய – மாநில உறவு குறித்து மேடையில் பேசிய ஸ்டாலின், “கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகமான தோழர்கள் உயிர்கொடுத்த இடம் இந்த கண்ணூர். இந்தியாவின் விடுதலை போராட்டத்திலும், பொதுவுடைமை புரட்சிக்கும் அடித்தளமான வீரர்கள் சிறைவைக்கப்பட்ட இடம் தான் இந்த கண்ணூர். ஒரு மாநிலத்தின் ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பினராயி விஜயன் இருக்கிறார். ஒன்றிய மாநில உறவுகளைப் பற்றி பேசுவதற்கு முழு உரிமை தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் உண்டு.
இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால், முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆனால் சிலர் அரசியல் அரிச்சுவடியை மாற்றுகிறார்கள். நாம் பல வேற்றுமைகளுடன் தான் ஒற்றுமையுடன் இருக்கிறோம். ஆனால் இந்த வேற்றுமைகளையெல்லாம் அழித்து, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என அனைத்தையும் மாற்றுகிறார்கள்.
இப்படியே போனால் ஒரே கட்சியாகிவிடும். ஒரே காட்சியானால் ஒரே ஆள் ஆகிவிடும். ஒரே கட்சியானால் பாஜக மகிழ்ச்சியடையலாம். இத்தகைய எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல் தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதாகும். மாநிலங்களை அழிக்க நினைப்பவர்களாக ஒன்றிய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் கூட இத்தகைய அதிகாரம் பொருந்திய ஒற்றைத் தன்மை ஆட்சியை உருவாக்க நினைக்கவில்லை.
ஆங்கில ஆட்சி கூட செய்யாததை, இன்றைய பாஜக அரசு செய்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஜிஎஸ்டி கொண்டுவந்தார்கள், வரி வருவாயைப் பறித்தார்கள். மாநில அரசுக்கான நிதிகளை வழங்குவதே இல்லை. தமிழ்நாட்டிற்கு 21 ஆயிரம் கோடி நிதி வரவேண்டியிருக்கிறது. தேசிய வளர்ச்சிக்குழுவை கலைத்துவிட்டார்கள். பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ஆளுநரை வைத்து அதை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். 8 கோடி மக்களை விட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? மாநிலங்களின் உரிமைகளுக்காகப் போராட முதலில் தென்மாநிலங்களில் முதலமைச்சர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்ததாக வேண்டும்” என ஸ்டாலின் உரையாற்றினார்.