பெங்களூரு : கர்நாடகா அரசையே திணறடிக்கும் வகையில், பெங்களூரின் ஒன்பது தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ – மெயிலில் மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் வந்த மிரட்டலால் மொத்த போலீசும் அதிர்ந்து போயினர். இறுதியில் வெறும் புரளி என்பது தெரிய வந்ததால், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ‘பெங்களூரில் நேற்று மஹாதேவபுராவில் உள்ள கோபாலன் இன்டர்நேஷனல் பள்ளியில் பயங்கர வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து சிதறும், வெறும் நகைச்சுவை அல்ல’ என்றும் இ – மெயிலில் மிரட்டல் வந்தது.
இதை கவனித்த பள்ளி நிர்வாகம், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோரை வரவழைத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய்களுடன் வந்து பள்ளியின் ஒவ்வொரு பகுதியையும் சோதனை செய்தனர். வகுப்பறைகள், கழிவறைகள், ஆய்வகங்கள் என ஒரு பகுதியையும் விட்டு வைக்கவில்லை.
அதற்குள், வர்த்துாரின் டில்லி பப்ளிக் பள்ளி, மாரத்தஹள்ளியின் நியூ அகாடமி பள்ளி, ஹென்னுாரின் செயின்ட் வின்சென்ட் பவுல் பள்ளி, கோவிந்தபுராவின் இண்டியன் பப்ளிக் பள்ளி.ஹெப்பகோடியின் எபினைசர் பள்ளி, சர்ஜாபுராவின் எபினைசர் பள்ளி, பேகூர் ரெட்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் அகாடமி, பன்னரகட்டா கொப்பா சாலையின் கேன்டல் இன்டர்நேஷனல் பள்ளி என ஒன்பது பள்ளிகளுக்கு அடுத்தடுத்து இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் பறந்தது.ஒன்றும் புரியாத போலீசார், சற்றும் தாமதிக்காமல் அனைத்து பள்ளிகளுக்கும் விரைவாக சென்று சோதனை செய்தனர்.எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்த பள்ளிகளில், மாணவர்கள் எந்த அச்சமும் இன்றி எழுதினர். அவர்களை வேறு இடத்துக்கு அழைத்து சென்று தேர்வு எழுத வைக்கப்பட்டனர்.டி.ஜி.பி., பிரவீண் சூட், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், உளவு துறை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இறுதியில், எந்த பள்ளியிலும் வெடிகுண்டோ, வெடி பொருளோ கிடைக்கவில்லை. அதன் பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.சம்பவம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:கர்நாடகாவில் அமைதியை சீர்குலைப்பதற்கான சூழ்ச்சி நடக்கிறது.
கர்நாடகா வளர்ச்சியடைந்த மாநிலம். எனவே அவப்பெயர் ஏற்படுத்த சிலர் அடிக்கடி இது போன்று செய்கின்றனர்.இத்தகைய சம்பவங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புரளி இ – மெயில் அனுப்பியவர்கள் கைது செய்யப்படுவர். பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.