தற்போது H-1B, H-2A, H-2B மற்றும் H-3 ஆகிய விசாக்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல H-4 விசா வாங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர்கள் அங்கு பணி செய்வதற்கு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணமான (EAD) படிவம் I-765க்கு விண்ணப்பித்து அனுமதி வாங்கி அவை செயலாக்கப்படும் வரை விண்ணப்பித்தவர்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்துக் காத்திருக்கவேண்டும்.
ஆனால் இந்த புதிய மசோதா H-1B, H-2A, H-2B மற்றும் H-3 விசா வைத்திருப்பவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு H-4 விசாக்கள் மூலம் ‘automatic work rights’ என்ற தானாகவே பணி செய்வதற்கான அனுமதியை வழங்குகிறது. இதன்படி இவர்கள் தங்களின் H-4 விசாக்கள் மூலம் அமெரிக்காவில் பணி செய்வதற்கான உரிமையை எந்த போராட்டமுமின்றி எளிதில் வழங்க இந்த மசோதா வழிவகுக்கிறது. மேலும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணமான (EAD) படிவம் I-765க்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவையை இந்த மசோதா நீக்கிவிடும் என்று கூறியுள்ளனர்.
இந்த மசோதாவை அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் போர்டோக்ஸ்(Carolyn Bourdeaux), மரியா எல்விரா சலாசர் (Maria Elvira Salazar) ஆகிய இரண்டு சட்டமியற்றுபவர்கள், பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அப்போது பேசிய அவர்கள், மிகவும் திறமையான புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் துணைவர்கள் அமெரிக்காவில் பணி செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பல ஆண்டுகளாக அதிகாரத்துவ சிவப்பு நாடா (bureaucratic red tape) மூலம் போராட வேண்டியுள்ளதாகக் கூறினர்.
மேலும் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பங்களிக்கவும், செழிக்கவும் இருந்த தேவையற்ற தடைகளை இந்த மசோதா நீக்குகிறது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள திறமை வாய்ந்தவர்களை ஈர்க்கலாம். இங்கு புலம்பெயர்ந்து வாழும் திறமை வாய்ந்த புலம்பெயர்ந்தோரின் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவில் வாழும் மற்றவர்களைப் போலவே வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மசோதாவை அறிமுகப்படுத்தியவர்கள் கூறினார்கள்.