IMF உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளூநர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்து (IMF)டன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் புதிய ஆளூநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் முதல் சுற்றுபேச்சுவார்த்தையை நாளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறிது காலம் செல்லலாம். பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவரும் வரையில் மக்கள் அமைதியான முறையில் செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்;.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சில மாதங்கள் செல்லக்கூடும் 

புதிய ஆளுநர் தனது பதவியை நேற்று (08) பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான ஆற்றல் இலங்கை மத்திய வங்கியிடம் உண்டு. எதிர்வரும் சில மாதங்களில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதற்கு அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் தெரிவித்தார்

அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் தான் சுயாதீனமான முறையில் தமது பதவியில் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.

பெரும் தொகையில் நாணயத்தாள்கள் அச்சிட்டப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள்

பல் வேறு நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெரும் தொகையில் நாணயத்தாள்கள் அச்சிட்டப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலும் இதன் போது பதிலளித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் இவை அச்சிடப்படுகின்றன.வேறு எந்த நிறுவனங்களிலும் இவை அச்சிடப்படுவதில்லை என்று ஆளூநர் பதிலளித்தார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு நாட்டின் தற்போதைய நிலையை வெளிப்படையாக தெரிவிப்பது முதல் பணி என மத்திய வங்கியின் புதிய ஆளுரான கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களை ஏமாற்ற முடியாது

எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் இல்லையென்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகுந்த சவால்மிக்கதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு  தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்தே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான காலம் தீர்மானிக்கப்படும். நாட்டின் கடனை செலுத்துவது பற்றியும் அவர் தெளிவுபடுத்தினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஏற்றுமதி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே மிகவும் பொருத்தமானது என்றும் புதிய ஆளூநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.