RCB vs MI: போராடிய சூர்யகுமார்; மும்பையின் தோல்விக்குக் காரணமான அந்த 5 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும்!

ஐ.பி.எல் போட்டிகளில் தோற்கும் அணிகளின் கேப்டன்களை டிரெஸ்ஸிங் ரூமுக்குள் செல்லவிடாமல் அப்படியே அள்ளி அணைத்து கொண்டு வந்து முதலிலேயே ஒரு தனி ஏரியாவில் வைத்து பேட்டி எடுத்து அனுப்பிவிடுவார்கள். கடந்த போட்டியில் ரோஹித் சர்மா பேட்டி கொடுத்த போது ‘எப்போதுமே இந்தச் சூழலில் நின்றுகொண்டிருப்பதை நான் விரும்பவில்லை’ எனப் பேசியிருந்தார். ஆனால், பெங்களூருவிற்கு எதிரான நான்காவது போட்டி முடிந்த பிறகும் ரோஹித் சர்மா அங்கேயேதான் நின்று கொண்டிருக்கிறார். மும்பையின் தோல்விகள் தொடர் கதையாகியிருக்கின்றன.

அப்துல் காலிக் – தனுஷ்கோடி காம்பீனேஷன் போல லூப் மோடில் சென்னையும் மும்பையும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. பெங்களூருவிற்கு எதிரான இந்தப் போட்டியை மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சூர்யகுமார் யாதவ் ஒற்றை ஆளாக நின்று சூறாவளியாகச் சுழன்றடித்த அரைசதம் மட்டுமே மும்பை ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்திருக்கிறது.

Rohit Sharma

புனேவின் MCA மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் டு ப்ளெஸ்ஸிஸே டாஸை வென்றிருந்தார். வழக்கத்தை மீறாமல் சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். மும்பை அணி முதலில் பேட்டிங். மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஃபார்முக்கு வராததும் இத்தனை நாள்களாக அந்த அணிக்கு பிரச்னையாக இருந்தது. ஆனால், இன்று ரோஹித் சர்மா கொஞ்சம் நன்றாகவே ஆடியிருந்தார். டேவிட் வில்லி, சிராஜ் ஆகியோர் பந்தை நன்கு மூவ் செய்ததால் முதல் இரண்டு ஓவர்களில் இஷன் கிஷன் – ரோஹித் கூட்டணி கொஞ்சம் பார்த்தே ஆடியிருந்தது.

மூன்றாவது ஓவரிலிருந்து ரோஹித் வேலையைக் காட்டத் தொடங்கினார். சிராஜ், ஆகாஷ் தீப், வனிந்து ஹசரங்கா என அத்தனை பேரின் ஓவர்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்திருந்தார். இதனால் மும்பை அணி பவர்ப்ளேயில் 49 ரன்களை எடுத்திருந்தது. ஒரு விக்கெட்டை கூட இழந்திருக்கவில்லை. மும்பைக்கு இது நல்ல தொடக்கமே. ஆனால், இந்தத் தொடக்கத்தை அந்த அணியால் அப்படியே தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக, பவர்ப்ளே முடிந்த பிறகான சில ஓவர்கள் ரொம்பவே கொடூரமாக அமைந்திருந்தது. பவர்ப்ளே முடிந்த உடனேயே ஹர்சல் படேலின் கைக்கு பந்து சென்றது. அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே ரோஹித் சர்மா அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 15 பந்துகளில் 26 ரன்களை அடித்திருந்தார்.

பவர்ப்ளேக்கு பிறகு 11வது ஓவருக்குள் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த 5 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும்தான் மும்பையின் இன்றைய தோல்விக்கு முழுமுதற்காரணமாக அமைந்திருந்தது.

Wanindhu Hasaranga

வனிந்து ஹசரங்காவின் திணறடிக்கும் ஹூக்ளிக்களில் டெவால்டு ப்ரெவீஸும் பொல்லார்டும் lbw ஆகியிருந்தனர். பொல்லார்ட் இலங்கைக்கு எதிராக 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்த போட்டியிலேயே அவரின் விக்கெட்டை ஹசரங்காதான் தனது ஹூக்ளியால் வீழ்த்தியிருப்பார். சில ஸ்பின்னர்களை கண்ணை மூடிக்கொண்டு கூட சிக்ஸராக்கும் வல்லமை கொண்ட பொல்லார்ட் வனிந்து ஹசரங்காவிடம் திணறுவது சுவாரஸ்யமான விஷயம். ஆகாஷ் தீப்பீன் ஓவரில் ரொம்ப நேரமாக பொறுமை காத்துக் கொண்டிருந்த இஷன் கிஷன் நடையைக் கட்டினார். முக்கியமான இளம் வீரரான திலக் வர்மாவை மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆக்கியிருந்தார்.

50-1 என்ற நிலையிலிருந்து கண் இமைப்பதற்குள் 62-5 என்ற நிலைக்கு மும்பை சரிந்தது. 100 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆகாமல் மானத்தைக் காப்பாற்றினால் போதும் என்ற சூழலில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சூர்யகுமார் யாதவிற்கு வரிசையாக விழுந்த விக்கெட்டுகள் எதுவும் எந்தவிதமான அழுத்ததையும் கொடுத்ததை போல தெரியவில்லை. அவர் எப்படி விரும்பினாரோ அப்படியே தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார். மற்ற மும்பை பேட்ஸ்மேன்கள் எல்லாம் பாலைவனத்தில் ஆடியதைப் போலவும் இவர் மட்டும் நல்ல பேட்டிங்கிற்கு வாட்டமான ஒரு மைதானத்தில் ஆடியதை போலவும் இருந்தது. எந்தச் சிரமமும் இல்லாமல் அடித்து வெளுத்தார். இதனால் அணியின் ஸ்கோரும் வேக வேகமாக கூடியது. 100 ஐ தொட்டாலே ஆச்சர்யம் என்ற சூழலில் 150-ஐ இலக்காக வைத்து சூர்யகுமார் யாதவ் ஆடினார்.

SuryaKumar Yadav

ஹர்சல் படேலின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 150-ஐயும் தாண்ட வைத்தார். சூர்யகுமார் 37 பந்துகளில் 68 ரன்களை அடிக்க மும்பை அணி 151 ரன்களைத் தொட்டிருந்தது.

மும்பை அணி எதிர்பார்க்காத அளவுக்கு அதிகமாக ரன்களை அடித்திருந்தாலும், ஒட்டுமொத்தத்தில் இது ஒரு சுமாரான டார்கெட்தான். இந்த டார்கெட்டை எந்தச் சிரமமும் இன்றி சௌகரியமாக எட்ட வேண்டும் என்பதால் தொடக்கத்தில் ரிஸ்க் எடுக்காமல் மெதுவாக ஆடினர். அனுஜ் ராவத் மட்டும் தொடக்கத்தில் உனத்கட்டின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இறங்கி வந்து லாங் ஆனிலும் லாங் ஆஃபிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருப்பார். மற்றபடி அடக்கியே வாசித்தனர். இதனால் பவர்ப்ளேயில் 30 ரன்களை மட்டுமே அடித்திருப்பர். ரன்ரேட் எகிறுவதை புரிந்து கொண்ட டூப்ளெஸ்சிஸ் கொஞ்சம் ஷாட்களை ஆட ஆரம்பித்தார். பவுண்டரிகள் வந்தன. கூடவே அவரின் விக்கெட்டும் வந்தது.

உனத்கட்டின் ஓவரில் லாங் ஆனில் பெரிய ஷாட்டுக்கு முயன்று 16 ரன்களில் கேட்ச் ஆனார். இதன்பிறகு, அனுஜ் ராவத்தும் கோலியும் கூட்டணி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி திறம்பட ஆடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்து, ஒரு கட்டத்திற்குப் பிறகு கியரை மாற்றத் தொடங்கினர்.

அனுஜ் ராவத் க்ரீஸை விட்டு இறங்கி வந்து சிக்ஸர்களாக பறக்கவிட்டார். கோலி தனது ஸ்டைலில் க்ளாஸான ஷாட்களை ஆடினார்.

அனுஜ் ராவத் அரைசதத்தைக் கடந்து 66 ரன்களை எடுத்தார். கோலி அரைசதத்தை நெருங்கி 48 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து 80 ரன்களை அடித்திருந்தனர். கடைசிக் கட்டத்தில் இருவரும் அவுட் ஆனாலும் ஆட்டம் பெங்களூருவின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்திருந்தது. தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர் அடிக்க, மேக்ஸ்வெல் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து 19 வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வைத்தார். பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Anuj Rawat

4 வெளிநாட்டு வீரர்களைக் கூட தேர்ந்தெடுக்க முடியாத பரிதாப நிலைக்கு மும்பை வந்து சேர்ந்திருக்கிறது. பேட்டிங் – பௌலிங் இரண்டிலுமே பெரிதாக துடிப்பே இல்லை.

ரோஹித் சர்மா இன்னமுமே அந்தக் காரணம் கூறும் இடத்தில்தான் நின்றுக்கொண்டிருக்கிறார். தீர்வுகளை எட்டி எப்போதுதான் அந்த விருதுபெறும் இடத்திற்கு வருவாரோ?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.