வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்த நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கு நாளை பார்லிமென்ட் கூட உள்ளது. அதில், எதிர்க்கட்சிகளின் சார்பில் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் கட்சி சார்பில் மெக்மூத் குரேஷி போட்டியிடுகின்றனர்.
பாகிஸ்தானில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அதில், தோல்வியடைந்ததால், பிரதமர் இல்லத்தில் இருந்து இம்ரான் கான் வெளியேறினார். 342 உறுப்பினர்களில், 174 பேர் இம்ரான் கானுக்கு எதிராக ஓட்டு போட்டனர். பாகிஸ்தான் வரலாற்றில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த முதல் பிரதமர் என்ற பெருமை இம்ரான் கானுக்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக பார்லிமென்ட் நாளை மதியம் கூட உள்ளது.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக அவர் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், அரசியல் சாசனத்தை காக்க ஒற்றுமையுடன் இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதனிடையே, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில், ஷா மெக்மூத் குரேஷியை பிரதமர் பதவிக்கு களமிறக்கப்பட்டுள்ளார்.
அதில், ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement