அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் நாளை (ஏப்.11) நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நீர்மோர், தண்ணீர் பந்தலை நேற்று திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
பழைய ஆட்சியாளர்களை குறை கூறிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனால், பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் ஏப்.11-ம் தேதி (நாளை) சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. அது நல்ல தீர்ப்பாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு தினகரன் கூறினார்.