திருப்பதி:
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்த 2½ ஆண்டுகளுக்கு பிறகு சரியாக பணி செய்யாத அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி 24 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கினர். இந்நிலையில் நாளை காலை 11.31 மணிக்கு வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
அரசு ஆலோசகர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் நேற்று காலையும், மாலையும் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி கூறியிருப்பதாவது:-
“அமைச்சர்களின் இறுதிப் பட்டியல் தயாரான பின்னர், சீல் வைத்த ‘கவர்’ ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி அழைப்பு விடுக்கப்பட்டு, பதவி பிரமாண நிகழ்ச்சிகள் நடைபெறும். அதுவரை எதுவும் கூற இயலாது” என்றார்.
மூத்த அமைச்சர்கள் என 8 முதல் 10 பேருக்கு மீண்டும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்கள் உதயமானது. ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 26 அமைச்சர்கள் பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சாதி வாரியாக பிரிக்கப்பட்டு அனைத்து பிரிவினரையும் திருப்திபடுத்தும் வகையிலும், வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டும் நன்றாக பணி செய்யும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இன்று மாலைக்குள் புதிய அமைச்சர்களின் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.