இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை எதற்கான தான் பாராட்டுகிறேன் என நடிகர் நாசர் விளக்கம் அளித்தார்.
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஐகான் விருதினை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எல். முருகன் வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் சங்கத்தலைவர் நாசர் பேசியதாவது:
ஏ. ஆர். ரஹ்மான் வாங்கிய இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்காகவோ, அவர் இசையமைத்த பாடல்களுக்காகவோ நான் அவரை பாராட்டவில்லை. தான் கற்ற வித்தையை அடுத்த தலைமுறையினர் கற்க வேண்டும் என்பதற்காக இசைக்கல்லூரியை தொடங்கியதற்காகவே அவரை பாராட்டுகிறேன். ஒரு சினிமா மொழி சார்ந்த எல்லையோடு இல்லாமல், பிற மொழி சார்ந்தவர்களின் திறனையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தி சினிமாவில் நாம் கற்க வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. கற்றலில் இருக்கும் செல்வம், வேறெதிலும் இல்லை. டிடிஎஸ் வரிச்சுமையை 1.5% லிருந்து மீண்டும் 10 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார்கள். சிறு படங்களுக்கு வரிக்குறைப்பு உதவிகரமாக இருக்கும். இதுகுறித்து நிதியமைச்சருடன் எங்கள் பிரதிநிதிகள் பேசி உள்ளார்கள் என்றார் அவர்.
இதேபோல், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “1000 திரைப்படங்கள் தயாரிக்கும் இந்திய சினிமாவில் 600 திரைப்படங்களை தென்னிந்திய சினிமா தருகின்றன. தங்கத்தை வாங்கும் போது, அதற்குரிய பணத்தை கொடுத்து வாங்குகிறோம். ஆனால் சினிமாவை அப்படி வாங்குவதில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக மற்ற துறைகளுக்கு கொடுத்தார்கள். ஆனால் சினிமா தொழிலுக்கு தரவில்லை. இங்கு 90% பேர் தினக்கூலிகளாகவே உள்ளனர். எங்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பை அரசு வழங்கினால் நாங்களே எங்களை புணரமைத்துக் கொள்வோம். ஏ.ஆர்.ரகுமான் இந்த துறையை கட்டமைப்போடு கொண்டு செல்ல உதவ வேண்டும்” என்றார்.