இந்தியாவில் ஒமைக்ரான் எக்ஸ்இ: ஆய்வு நடப்பதாக மத்திய அரசு தகவல்!

கொரோனா
வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் பரவி வரகிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸின் எக்ஸ்இ எனப்படும் புதிய மாறுபாடு ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்றதொரு திரிபு பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறியதாவது, “ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. தற்போது வரை, ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு கொரோனா வைரஸ்களில் மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது. எக்ஸ்இ தொடர்பான புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகையாக இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மும்பை வந்த ஆடை அலங்கார பெண் கலைஞருக்கு மார்ச் 2ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எக்ஸ்இ வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது. ஆனால், மும்பையில் கண்டறியப்பட்டது ஒமைக்ரானின் உருமாற்ற வகையான எக்ஸ்இ (XE) வைரஸ் வகைத் தொற்று இல்லை; அதற்கான போதிய ஆதாரம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. INSACOG மரபணு நிபுணர்கள் நடத்திய ஆய்வில் XE வகைத் தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு சென்ற ஒருவருக்கு இந்த புதிய வகை
ஒமைக்ரான் எக்ஸ்இ
வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக, இந்த
ஒமைக்ரான்
எக்ஸ்இ மரபணுவின் பகுப்பாய்வு நடந்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.