அகமதாபாத்: குஜராத்தில் ஓட்டலில் தங்கியிருந்த மும்பையை சேர்ந்தவருக்கு கொரோனாவின் புதிய வகையான எக்ஸ்இ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘எக்ஸ்இ’ என்ற உருமாற்ற கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இது, இங்கிலாந்தில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மும்பையை சேர்ந்த பெண்ணுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், ஒன்றிய சுகாதாரத் துறை அதை மறுத்தது. இந்நிலையில், குஜராத்தில் ஒருவருக்கு எக்ஸ்இ பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மும்பையை சேர்ந்த சான்டா கிரஸ் என்பவர், கடந்த மாதம் பணி நிமித்தமாக குஜராத் சென்றுள்ளார். வதோதராவில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் தங்கியபோது, தொடர்ந்து காய்ச்சல் அடித்துள்ளது. இதனால், தானாக சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அவருடன் மனைவியும் சென்றுள்ளார். கடந்த மாதம் 12ம் தேதி சான்டாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர் உடனடியாக மும்பை திரும்பி சென்றுள்ளார். அவரது வைரஸ் மாதிரி மரபணு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வந்த இந்த ஆய்வு முடிவில், சான்டாவுக்கு எக்ஸ்இ தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக வதோதரா மாநகராட்சியின் சுகாதார மருத்துவ அதிகாரி தேவேஷ் படேல் கூறுகையில், ‘‘மார்ச் 12ம் தேதி அந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவரது மாதிரியின் மரபணு பரிசோதனை முடிவு, நேற்று கிடைத்தது. இதில், அவருக்கு எக்ஸ்இ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பரிசோதனையின்போது உள்ளூரில் இருக்கும் உறவினரின் முகவரியை கொடுத்துள்ளார். பின்னர், மும்பை திரும்பி விட்டார். எனவே, பாதிக்கப்பட்ட நபர் குறித்த முழு விவரங்களும் இன்னும் தெரியவில்லை,” என்றார்.புதிய பாதிப்பு 1150 * நாடு முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,34,217 ஆக உயர்ந்துள்ளது. * ஒரே நாளில் புதிதாக 83 பேர் பலியாகி உள்ளனர். இதில், கேரளாவில் மட்டுமே 75 பேர் இறந்துள்ளனர். நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,21,656 ஆக அதிகரித்துள்ளது.* 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கைநாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், டெல்லி, அரியானா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் மட்டும் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், கண்காணிப்பை தீவிரப்படுத்தப்படியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் இம்மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இந்த மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் 2,321 புதிய பாதிப்புக்கள் பதிவாகி உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 31.8 சதவீதமாகும்.