மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும். உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் இந்தியில் மட்டுமே நடைபெறுகின்றன. அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும். அது இந்தியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதற்கு நாடு முழுவதும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன.
குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘’ழகரம் ஏந்திய தமிழிணங்கு’’ ஓவியத்தை பதிவிட்டு, பாரதிதாசனின் ’இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ பாடல் வரியைக் குறிப்பிட்டுருந்தார். இதன் எதிரொலியாக, இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துகள் தற்போது வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில்தான், திருவாரூரில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “இந்தியைத் திணிப்பது சாத்தியமல்ல’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக கூட்டத்தில் உரையாற்றிய கி.வீரமணி, “மத்திய அரசு பல்வேறு முறைகளில் நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 90 சதவிகித மாணவர்கள் மாநிலக் கல்விக் கொள்கையிலேயே படித்து வரும் சூழலில், மத்திய அரசால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கல்விக் கொள்கையில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, காக்கும் வல்லமை திராவிட மாடல் ஆட்சிக்கு மட்டுமே உண்டு. திராவிட மாடல் ஆட்சியை நிலைநிறுத்திய பெருமை அறிஞர் அண்ணாவையே சேரும். ஒரே நாடு, ஒரே மொழி எனக் கூறி, மத்திய அரசு வெறுப்பு அரசியலை, மோதல் அரசியலை உண்டாக்குகிறது. குலகல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டு வருகிறது. இதனால் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத நிலை உருவாகும். குலக்கல்வித் திட்டத்தை காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் எதிர்த்தனர். தற்போது மீண்டும் அந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது’’ என்றார்.
அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்பு கருத்து குறித்து, காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். “இருமொழிக் கொள்கை மட்டுமே நமக்கு உகந்தது என்பதை அறிஞர் அண்ணா தெளிவாக ஆழமாக உணர்த்தினார். ஒரே நாடு, ஒரே மொழி என்பதை அடிப்படையாக வைத்து, இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. அது சாத்தியமானதல்ல. பல்வேறு மாநிலங்கள் இந்தியை எதிர்க்கின்றன. இந்திய ஒருமைப்பாட்டை காக்க வேண்டியவர்களே அதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்தில் மட்டுமே தீவிரமாக இருந்த இந்தி எதிர்ப்பு, தற்போது அகில இந்திய பிரச்னையாக உருவெடுத்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.