சென்னை:
சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் த.மயிலை வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க. 20 வருடங்களுக்கு பிறகு வெற்றிபெற்றுள்ளது. அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக நான் தான் காரணம் என்கிறார். ஆனால் அதற்கு நான் காரணம் இல்லை என்று அவரே மறுத்து பேசியும் உள்ளார்.
இந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தி திணிப்பிற்கு மட்டுமே நாங்கள் எதிரானவர்கள். நமது முதல்வர் கேரளா சென்றபோது, கேரள முதல்வர் தமிழக முதல்வரை இந்தியாவே உற்றுநோக்க கூடிய ஆட்சியை செய்து வருகிறார் என பாராட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சியில் வெள்ளத்தடுப்பு பணிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் எதையும் செய்யவில்லை.
ஜெயலலிதா மீது சொத்துகுவிப்பு வழக்கு மட்டுமே உள்ளது. ஆனால் இந்த மற்றவர்கள் மீது கொலை வழக்கு, கொள்ளை வழக்கு உள்ளது. உங்களை பா.ஜ.க. விட்டாலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடமாட்டார். அடிமைத்தனமாக நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டு வந்து 17 பேர் உயிரிழக்க செய்து உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்வரை நீட் தமிழகத்திற்கு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பா.ஜ.க. வுடன் சேர்ந்து நீட் தேர்வை தமிழகத்திற்கு வரவழைத்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அப்துல்லா எம்.பி., கருணாநிதி எம்.எல்.ஏ., பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, கே.ஏழுமலை, கி.மதி, நியமன குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், கவுன்சிலர்கள் கீதா முரளி, விமலா கிருஷ்ணமூர்த்தி, ரேவதி மற்றும் தவநேசன், குமாரி, உதயகுமார், தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்… தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது