பெங்களூரு : அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, காங்கிரஸ் இப்போதே தயாராக துவங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும், வேட்பாளர்களை அடையாளம் காண, இன்று முதல் தொடர் கூட்டம் துவங்குகிறது.அடுத்த சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றி, கர்நாடகாவில் ஆட்சியில் அமர வேண்டுமென்பது, காங்கிரசின் குறிக்கோள். வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.
மாநில காங்., பொறுப்பாளர் ரனதீப் சுர்ஜிவாலா தலைமையில், பிரிவு வாரியாக கூட்டம் பெங்களூரில் இன்று துவங்குகிறது; தொடர்ந்து நான்கு நாட்கள் கூட்டம் நடக்கும்.இன்று துமகூரு, நாளை பெங்களூரு ரூரல், புதன் கிழமை தாவணகரே, வியாழன் அன்று சித்ரதுர்கா தலைவர்களுடன், ஆலோசனை நடத்தி கருத்துகள் கேட்கப்படுகின்றன.மாநில தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, செயல் தலைவர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அந்தந்த தொகுதியில், காங்கிரசின் சூழ்நிலை என்ன; எந்த சமுதாயத்தினருக்கு டிக்கெட் கொடுத்தால் வெற்றி பெறுவர்; முந்தைய தேர்தலில் வேட்பாளரின் தோல்விக்கு என்ன காரணம் என்பன உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்படும்.அதுபோல, தொகுதியில், எந்தெந்த விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, எதிராளியாக போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்களின் திறன் என்ற விபரங்களை, சுர்ஜிவாலா கேட்டறிவார்.
Advertisement