பங்குனி மாத புனர்பூச நட்சத்திரமான இன்று (ஏப்.10) ஸ்ரீராமநவமி கொண்டாடுகிறோம்.இந்நாளில் விரதமிருப்பவர்கள் காலையில் பூஜையறையில் கோலமிட்டு ராமர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து துளசி மாலை சூட்டுங்கள். விளக்கேற்றி ராம அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் ஜபியுங்கள். ‘ராம ராம ராம’ என்னும் நாமத்தையும் 108 முறை சொல்லலாம். சுண்டல், பாயசம், பானகம், வடை, நீர்மோர், பஞ்சாமிர்தத்தையும் படையுங்கள். கம்பர், துளசி ராமாயணத்தில் ராமர் பிறப்பை படிக்கலாம். 1008 முறை ‘ஸ்ரீராம ஜயம்’ எழுதலாம். மாலையில் கோயில் வழிபாடு அவசியம். பானகம், நீர்மோர், விசிறி தானம் செய்யலாம். ஸ்ரீராமரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
நன்மை தரும் பாட்டு
கம்பராமாயணத்திலுள்ள
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
என்ற பாடலை ஸ்ரீராமநவமியன்று பாட வேண்டும். ராமனின் பெயரைச் சொன்னால், நன்மையும், செல்வ வளமும் உண்டாகும். தீமையும், பாவமும் அழிந்து போகும். பிறப்பு, இறப்பும் இரண்டும் நீங்கி பிறவிச் சுழலில்இருந்து விடுபடலாம் என்பது இந்தப் பாடலின் பொருள்.
பாசமலர்கள் பூக்கட்டும்
பெற்றோர் காலத்திற்குப் பின் சகோதரர்களின் ஒற்றுமை குறைந்து விடும். ஆனால் பழைய நினைவுகள் மனதிற்குள் வந்து போகும். மீண்டும் சேர மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு உண்டாகும். சகோதர ஒற்றுமை நிலைக்க விரும்பினால் பட்டாபிஷேக ராமர் படத்தை (பரதர், லட்சுமணர், சத்ருக்கன்) பூஜையறையில் வைத்து வழிபடுங்கள். ஒவ்வொரு மாதமும் புனர்பூசத்தன்று காலையில் மட்டும் விரதமிருந்து மாலையில் விளக்கேற்றி 108 முறை ‘ஸ்ரீராம ஜயம்’ எழுதுங்கள். அதன்பின் ராமர் அல்லது பெருமாள் கோயிலில் சுவாமிக்கு துளசி சாத்தி மூன்று முறை சன்னதியை வலம் வாருங்கள். ராம சகோதரர்களின் ஆசியால் குடும்பத்தில் பாசமலர் பூக்கும்.
ஆசை இல்லாத அயோத்தி
பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே என்றொரு பழமொழி உண்டு. ஆனால் ராமர் ஆட்சி செய்த அயோத்தியில் நடந்த சம்பவம் வியப்பாக இருக்கிறது. அயோத்தியில் வாழ்ந்த நவரத்தின வியாபாரியின் மகள், தன் திருமணத்திற்கு வரும்படி மகாராணி சீதைக்கு அழைப்பு விடுத்தாள். சம்மதித்த சீதை முத்துமாலை ஒன்றை பரிசளித்தாள். ஏராளமான நகைகள் தன்னிடம் இருப்பதால் யாராவது ஏழைகள் எடுத்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் அரண்மனை வாசலில் முத்துமாலையை விட்டுச் சென்றாள் அந்த பெண்.ஆசையே இல்லாத அயோத்தி மக்கள் அதை தொடக் கூட விரும்பவில்லை. நாளடைவில் வைர மாலை மண்ணுக்குள் புதைந்தது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத அயோத்திவாசியாக நாம் என்று மாறுவோமோ..
Advertisement