Lunch Box Recipes in tamil: வேர்க் காய்கறிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் இந்த கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிக இனிமையாக இருக்கும். இவற்றில் பல மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை காணப்படுகின்றன.
கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரட்டில் குறைவான கலோரிகள் இருப்பதால் டயட் இருப்பவர்கள் அவற்றை தவறாமல் சாப்பிடலாம். கேரட்டை அன்றாட சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலே முறியடிக்கலாம்.
கேரட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உடல் அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது. தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருவதால் முகம் பளபளப்பாக மாறும். இவற்றில் பொட்டாசியம், வைட்டமின் எ, பையோடின், வைட்டமின் பி6, வைட்டமின் கே1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகளை செய்கின்றன.
இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கேரட்டில் எப்படி டேஸ்டியான இன்ஸ்டன்ட் கேரட் சாதம் தயார் செய்யலாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
இன்ஸ்டன்ட் கேரட் சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப்
கேரட் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
பிரியாணி இலை – 1
கிராம்பு – 3
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 1
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
இன்ஸ்டன்ட் கேரட் சாதம் செய்முறை
முதலில் கேரட்டை எடுத்து அதன் தோலை நீக்கி துருவிக்கொள்ளவும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தொடர்ந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே எண்ணெயில் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய, பின்பு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து, 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
தொடர்ந்து சாதத்தை போட்டு, 3 நிமிடம் கிளறி கீழே இறக்கிக்கொள்ளவும். அவற்றின் மேலே முந்திரியை தூவவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் சுவையான கேரட் சாதம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“