இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அந்த நாட்டின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்தஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில்நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது.
இந்த தீர்மானத்தை நாடாளு மன்ற துணை சபாநாயகர் குவாசிம்கான் கடந்த 3-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இம்ரான்கானின் பரிந்துரையின் பேரில் அதிபர் ஆரிப் ஆல்வி, நாடாளுமன்றத்தை கலைத்தார்.
இதனிடையே துணை சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை கடந்த 7-ம் தேதிவிசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதன்படி, நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூடியது. இம்ரான் கானின் ஆதரவாளரான சபாநாயகர் ஆசாத் குவாசிம் வாக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்தினார். அவையை அடுத்தடுத்து ஒத்திவைத்தார். நள்ளிரவு வரை இதே நிலை நீடித்தது. நள்ளிரவில் சபாநாயகர் ஆசாத் குவாசிம் பதவியை ராஜினாமா செய்தார்.
எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பை நடத்தினர். தீர்மானம் வெற்றி பெற 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 174 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி உட்பட 11 எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக கைகோத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடாளுமன்ற செயலாளரிடம் முறைப்படி நேற்று மனு தாக்கல் செய்தார். இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் அதன் துணைத் தலைவர் ஷா மெகமூத் குரேஷியும் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்வு செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இதில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆட்சியமைக்க தேவையான எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.