உலகின் மிகப்பெரிய வானியல் ஆய்வகமான தென்னாப்பிரிக்க வானொலி வானியல் ஆய்வகத்தில் (SARAO) உள்ள மீர்கேட்(MeerKAT) என்ற தொலைநோக்கி ‘மெகாமாசர் (megamaser)’ எனப்படும் சக்திவாய்ந்த ரேடியோ-அலைக் கொண்ட வானியல் லேசர் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட ஹைட்ராக்சில் மெகாமாசர் வகைகளில் இதுதான் அதிக தொலைவில் உள்ள வானியல் லேசராகும் (Space laser) என வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது பூமியில் இருந்து சுமார் ஐந்து பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவைக் கொண்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் இதற்கு ‘Nkalakatha’என்று பெயரிட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘ஜுலு(Zulu)’ என்ற மக்கள் பேசக்கூடிய ‘இசிஜுலு(isiZulu)’ மொழியில் ‘Nkalakatha’ என்பதற்கு ‘பிக் பாஸ்’ என்று அர்த்தம் எனக் கூறப்படுகிறது. மேலும் இது மீர்கேட் தொலைநோக்கி மூலம் 3,000 மணிநேர கண்காணிப்பை உள்ளடக்கியதாக எதிர்பார்க்கப்பட்ட ஆய்வின் முதல் இரவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். இன்னும் பல கண்டுபிடிப்புகள் இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படும் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியை நான்கு ருட்ஜர்ஸ் வானியலாளர்கள் (Rutgers astronomers), சர்வதேச வானியலாளர்கள் குழு (International group of astronomers) இணைந்து நடத்தி இந்த மெகாமாசர் (megamaser) என்ற விண்வெளி லேசரைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது பற்றிக் கூறிய வானியலாளர் மார்சின் க்ளோவாக்கி(Marcin Glowacki), பிரபஞ்சத்தில இரண்டு விண்மீன் திரள்கள்(galaxi) கடுமையாக மோதும்போது இது போன்ற மெகாமாசர்கள் உருவாக்கப்படுகின்றன என்றும் ஓஹெச்(OH) [ஹைட்ராக்சில்] மெகாமாசர்களில் இதுவே முதன்மையானது என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.
மேலும், ‘ஒரே ஒரு இரவு கண்காணிப்பின் மூலம் சாதனைகளை முறியடிக்கும் மெகாமாசரை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என்பது சுவாரஸ்யமாக உள்ளது. தொலைநோக்கி எவ்வளவு நன்மையாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது’ என்று கூறினார். இந்த மீர்கேட்(MeerKAT) தொலைநோக்கியைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் இன்னும் பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.