கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் பல மணி நேரம் மின் தடை ஆகியவற்றால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சி திட்டமிட்டுளளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அதிக அதிகாரம் கொண்ட அதிபர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கோத்தபயவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மற்றும் பதவி நீக்கம் செய்வதற்கான பிரதான எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றும், ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று தலைநகர் கொழும்புவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரும் பதாகைகள் மற்றும் இலங்கை தேசிய கொடியை ஏந்தியும், அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்கு அருகே 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இதையும் படியுங்கள்…
பாகிஸ்தானில் சுதந்திர போராட்டம் மீண்டும் தொடங்குகிறது- இம்ரான் கான் கருத்து