இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு, கோத்தபய அரசின் திறமையின்மையே காரணம்- ரணில் விக்கிரமசிங்கே புகார்

கொழும்பு:
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதுடன், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, 2019 ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்த போது  இலங்கை பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.  தாம் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது உபரி நிதி போதுமான அளவில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
எங்களது ஆட்சிக் காலத்தில் இது போன்ற நெருக்கடி (பொருளாதார நெருக்கடி) ஒருபோதும் நடக்கவில்லை. எங்களது ஆட்சி நடைபெற்றபோது அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வரிசையில் நிற்கவில்லை என்றும், நிதி சவால்களை கையாள்வதில்  கோத்தபய ராஜபக்சே அரசின் திறமையின்மையால் தற்போது மக்கள் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசிடம் போதிய வளங்கள் கையிருப்பில் இருப்பதாக தாம் நினைக்கவில்லை, கோத்தபய அரசு முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் வாங்க முயற்சிக்கிறது, இது  இலங்கையை மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீனா புதிய முதலீடுகள் எதையும் செய்யவில்லை என்றும்,  இந்தியா, இலங்கைக்கு அதிகபட்ச உதவிகளை செய்துள்ளது என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நிதியல்லாத வழிகளில் இந்தியா உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.