கொரோனா பரவல் குறைந்ததையடுத்து,
திருப்பதி
ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், குறைந்த அளவிலேயே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அலிபிரியில் இருக்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள்
இலவச தரிசனம்
பெற குவிந்து வருவதால், வருகிற 12ஆம் தேதி வரைக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்றே பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு முடிந்து விட்டது.
இதையடுத்து டிக்கெட் கவுன்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற 12ஆம் தேதி வரை இலவச தரிசன டிக்கெட் பெற முடியாது. இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வருகிற 12ஆம் தேதி மதியத்துக்கு பின்னர், புதன்கிழமைக்கான (13ஆம் தேதி) டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளன.
அந்த டோக்கன்கள் மூலம் 13ஆம் தேதி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே, இந்த 4 நாட்கள் தரிசனத்தை தவிர்த்து விட்டு பின்னர் வருமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.