உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த ரஷ்யப் படைகள், தற்போது பொதுமக்களையும் கொன்று குவித்து வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதனால், உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இன்னும் உக்ரைன் – ரஷ்யா போர் நின்றபாடில்லை. இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துள்ளார்.இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரிட்டன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இது தொடர்பாக கூறும் போது, “உக்ரைன் மக்களுடன் நாங்கள் என்றும் இருப்போம் என்பதை வெளிக்காட்டும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கப் பிரதமர் உக்ரைனுக்குச் சென்றுள்ளார். உக்ரைன் நாட்டில் இப்போது இருக்கும் நிலைமை குறித்து இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர்’’ என்றார்.
இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறும்போது, “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உறுதியான தலைமை, உக்ரைன் மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன்’’ என்றார். சமீபத்தில், உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யப் படைகள் குண்டு வீசிய நிகழ்வைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.