உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்துள்ளார்.
உக்ரைன் மக்கள் சிங்கம் என்றால், அதன் கர்ஜனை நீங்கள் என ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார் போரிஸ் ஜோன்சன்.
உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போரிஸ் ஜோன்சன்,
விளாடிமிர் புடினின் துருப்புகளை விரட்டியடிக்க 120 கவச வாகனங்கள் மற்றும் புதிய கப்பல் தடுப்பு ஏவுகணை அமைப்புகளையும் உக்ரைனுக்கு அளிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
இரு தலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்து, உக்ரைனின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பிரதமர் போரிஸ் ஜோன்சன், போர் சூழல் மிகுந்த கீவ் நகரில் இருந்து வெளியேறும் வரையில், மொத்த திட்டமும் ரகசியம் காக்கப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகம், தவறுதலாக தமது டுவிட்டர் பக்கத்தில் போரிஸ் ஜோன்சனின் உக்ரைன் விஜயம் தொடர்பில் தகவல் பகிர்ந்திருந்தது.
உக்ரைன் இராணுவத்தினரின் துணிச்சலுக்கு தலைவணங்குவதாக கூறிய போரிஸ் ஜோன்சன்,
சில நாட்களில் உக்ரைன் கைப்பற்றப்படலாம் என்றும், சில மணிநேரங்களில் கீவ் நகரம் அவர்களின் படைகளிடம் சரணடையும் என்றும் ரஷ்யர்கள் நம்பினர். அவர்கள் கவவு பலிக்காமல் போயுள்ளது என்றார் அவர்.
மட்டுமின்றி, கீவ் நகரின் முக்கிய பகுதிகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் நடந்து சென்று பார்வையிட்டுள்ளார் பிரதமர் போரிஸ் ஜோன்சன்.
ஆயுதங்கள் மட்டுமின்றி உக்ரைனுக்கான பொருளாதார ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளார் போரிஸ் ஜோன்சன்.