லக்னோ: ‘உங்கள் சொந்த கட்சி விவகாரத்தை பார்க்காமல் அடுத்த கட்சி மீது பற்றி பேசக்கூடாது,’ என்று ராகுல் காந்திக்கு மாயாவதி பதில் அளித்துள்ளார். நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘உபி சட்டபேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் விரும்பியது. மாயாவதியே முதல்வராக இருக்குமாறும் தெரிவித்த போதும் அவர் எங்களுடன் பேசவே இல்லை. இதனால் அம்மாநிலத்தில் பாஜ ஆட்சிக்கு வர பகுஜன் சமாஜ் பாதை வகுத்து கொடுத்தது,’ குற்றம் சாட்டினார். இதுபற்றி மாயாவதி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தனது சொந்த வீட்டை ஒழுங்காக அமைக்க முடியாத ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி பற்றி பேசுகிறார். இந்த அற்ப விஷயங்களைக் காட்டிலும், உபி தேர்தல் தோல்வி குறித்து இப்போது காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் காங்கிரஸ் 100 முறை யோசிக்க வேண்டும். அவர்களால் பாஜ.வை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை. அப்போது, ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தும் உபி மாநிலத்துக்கு எதுவும் செய்யவில்லை. தனது சொந்த கட்சியினரை ஒன்றுபடுத்த ராகுல் காந்தியால் முடியவில்லை. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்பாடுகளை பற்றி குறை கூறுகிறார். இதன் மூலம் பகுஜன் சமாஜ் மீது உள்ள கோபத்தை அவர் வெளிக்காட்டி உள்ளார். இதர கட்சிகள் பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு தன்னுடைய கட்சி பற்றி அவர் யோசிக்க வேண்டும். இது என்னுடைய அறிவுரை,’ என்று கூறியுள்ளார்.