உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்| Dinamalar

புதுடில்லி-‘தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’ என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

‘கட்சிகளின் அறிவிப்புகள் சாத்தியமா என்பது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்’ என, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.தேர்தல் நேரத்தின்போது, மக்கள் வரிப் பணத்தில் இருந்து செலவிடும் வகையில், இலவச அறிவிப்புகள் வெளியிடுவது, இலவச பொருட்கள் தருவது போன்ற, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மக்கள் வரிப்பணம்

மனுவில் அவர் கூறியுள்ளதாவது:தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது மிக அதிக மாக உள்ளது. மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து இவ்வாறு இலவச பொருட்களை வழங்குவதாக அறிவிப்பது, தேர்தல் நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது.இது போன்ற இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அவ்வாறு வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது, தேர்தல் சின்னத்தை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதையும், மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதாகவே கருத வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் தன் பதில் மனுவை நேற்று தாக்கல்செய்துள்ளது. அதில்கூறப்பட்டுள்ளதாவது:தேர்தல் ஆணையத்துக்கு என, சில அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. குறிப்பிட்ட சில காரணங்கள் அடிப்படையிலேயே, அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும். கட்சி மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை ரத்து செய்ய முடியும். அதுபோல், கட்சி தன் பெயரை மாற்றி வேறு பெயரில் செயல்படும் போதும் ரத்து செய்ய முடியும். ஆனால், இலவச அறிவிப்புகள் வெளியிடுவதற்காக அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, தேர்தல் சின்னத்தை முடக்க, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

ஏற்கனவே, இந்திய தேசிய காங்கிரஸ் – சமூக நல மையம் தொடர்பான வழக்கில், இது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கட்டுப்பாடுகள் விதிப்புஅதுபோல பாலாஜி சுப்பிரமணியன் – தமிழக அரசு இடையேயான வழக்கில், தேர்தலின் போது எவ்விதமான அறிவிப்புகளை வெளியிடலாம் என, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பொது நிதியில் இருந்து இலவச அறிவிப்புகளை வெளியிடுவது என்பது கட்சிகளின் கொள்கை முடிவு. தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் எடுக்கும் முடிவுகள், கொள்கைகளில் தேர்தல் ஆணையத்தால் தலையிட முடியாது.தேர்தலுக்கு முன்போ, தேர்தலுக்குப் பிறகோ அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகள், செயல்படுத்துவதற்கு சாத்தியமானதா, மாநிலத்தின் நிதி நிலைமையை பாதிக்குமா என்பது குறித்து வாக்காளர்கள் தான் ஆராய்ந்து, தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும்.

இதில், தேர்தல் ஆணையம் எந்த வகையிலும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது.ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுகளின்படி, இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதித்தால், தேர்தல் நடைமுறைக்கு முன்னதாகவே, அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்தது போலாகிவிடும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.