‘மக்களுடன் மேயர் திட்டம்’ மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனக்குடன் தீர்வு காணப்படும் என திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் நேற்று தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ‘மக்களுடன் மேயர்’ திட்டம் வரும் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிகழ்வின்போது, மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என மேயர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மேயர் ந.தினேஷ்குமார், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: மாநகராட்சியில் தெருவிளக்குகள் பிரச்சினை தொடங்கி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டங்களையும் விரைவில் நடத்த உள்ளோம்.
குப்பையை எடையிட்டு, அதன் மூலம் அவற்றின் வருவாயை கணக்கிட தொடங்கி உள்ளோம். வரும் வாரத்தில் மேயர், துணை மேயர் பங்கேற்கும் பயிற்சிக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதன்பிறகு, திருப்பூரில் ‘மக்களுடன் மேயர்’ திட்டத்தை தொடங்க உள்ளோம். வாரந்தோறும் ஒரு வார்டில் 3 மணி நேரம் செலவிட்டு, தொடர்புடைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.
அப்போது, மாநகராட்சி அதிகாரிகளும் உடனிருப்பார்கள். இதன் மூலம் மக்களுடன் தொடர்ந்து நேரடியாக பேசவும், அவர்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, களத்தில் பணியாற்றவும் பெரும் வாய்ப்பாக இந்த திட்டம் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.