ருத்ராபூர்: உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
இம்மாநிலத்தின் உதம்சிங் நகர் மாவட்டம், ருத்ராபூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பூத் பங்களா காலனியில் அனீஸ் மியான் என்பவர் தனது மனைவி பர்வீன் ஜகான் மற்றும் 16 வயது மகள், 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். பாஜக நிர்வாகியான அனீஸ் மியான் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி அனீஸ் மியான், அவரது மனைவி பர்வீன் ஜகான் மற்றும் மகன், மகள் ஆகிய நால்வரும் அக்கம்பக்கத்தினரால் தாக்கப்பட்டு, பலத்த காயம் அடைந்தனர். இதில் பர்வீனுக்கும் அவரது மகளுக்கும் வெட்டு காயங்களும் ஏற்பட்டன.
இதையடுத்து நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பர்வீன் ஜகான் அளித்துள்ள புகாரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தன்னையும் தனது குடும்பத்தினரையும் அருகில் வசிக்கும் யூனூஸ், அவரது மனைவி ரேஷ்மா, சகோதரர் இர்பான் மற்றும் ஷகீல், அவரது மனைவி பேபி ஆகியோர் திடீர் என தாக்கியதாக கூறியுள்ளார்.
தனது கணவர் பாஜக நிர்வாகி என்பதாலும் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாலும் தாங்கள் தாக்கப்பட்டதாக அவர் புகாரில் மேலும் கூறியுள்ளார்.