லக்னோ: உத்தர பிரதேச சட்ட மேலவையில் (எம்எல்சி) காலியாக உள்ள 36 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், 9 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் மீதி உள்ள 27 இடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் 95 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சி,மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று காலையிலேயே வந்து தனது வாக்கை செலுத்தினார். ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 657 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 98.94 சதவீதம் வாக்கு பதிவாகியது. அதிகபட்சமாக அம்ரோஹாவில் 99 சதவீத வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறும். மொத்தம் 100 உறுப்பினர்களை கொண்ட சட்ட மேலவையில் பாஜவுக்கு 34, சமாஜ்வாடிக்கு 17, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4, காங்கிரஸ், அப்னாதளம், நிஷாத் கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினர்கள் உள்ளனர்.