பெங்களூரு:
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் உள்ளது.
இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை கருதப்படுகிறது.
தமிழகத்தின் மாரிமுத்து என்பவர் இந்த சிலை வடிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். இவர் 50 தொழிலாளர் குழுவுடன் 2014-ம் ஆண்டில் சிலை அமைக்கும் பணிகளை தொடங்கினார். தொடர்ந்து 7 ஆண்டுகள் பணியாற்றி, சிலையை உருவாக்கினர்.
சிலைக்கு இரும்பு மேடை, வலுவான சிமென்ட் கான்கிரிட் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலில் இச்சிலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆஞ்சநேயர் சிலை இன்று(ஞாயிற்றுக்கிழமை) ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இந்த சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமை தாங்கினார். சிலை திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். சிலை திறக்கப்பட்டதும் பக்தர்கள் கோஷம் எழுப்பினார்கள். பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைத்து பேசினார்.
இதையும் படியுங்கள்…திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றம்