சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் அவற்றின் விலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.
சில விற்பனை நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு ,லிற்றோ காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால் இதனை கட்டுப்படுத்தி உரிய விலைக்கு சமையல் எரிவாயு நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும்வகையில் நுகர்வோர் அதிகார சபை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் முறைப்பாடு தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் போதியளவு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருக்கும் வேளையில் அவற்றில் செயற்கையான ஒரு தட்டுப்பாடு நிலவ செய்ய, சில சக்திகள் முயன்று வருவதாக தெரிய வந்துள்ளது. இவற்றுக்கு பொதுமக்கள் இடமளிக்கக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யுமாறு லிற்றோ காஸ் நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 1311 என்ற துரித அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொண்டும் முறைப்பாடு செய்யலாம்.