`ஒட்டகப் பால்’ என்று சொன்னவுடன் உடனே நம் நினைவுக்கு வரும் முகம் இவருடையதாகதான் இருக்கும். வடிவேலு கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் சௌந்தர் அவரது திரை வாழ்க்கை குறித்து அளித்த சிறப்பு நேர்காணல் இதோ,
வெற்றிக்கொடி கட்டு படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நீங்கள் நடித்த ஒட்டக காமெடி முகநூல் மீம்களிலும், நகைச்சுவை சேனல்களிலும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அந்தக் காமெடி எப்படி காட்சியாக்கப்பட்டது?
முதன்முதலில் இயக்குநர் சேரன் வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் எனக்கு கொடுத்த வேடமே வேறு. கிளி ஜோசியம் பார்க்கும் கதாபாத்திரம்தான் எனக்கு கொடுக்கப்பட்டது. சூட்டிங்கில் வடிவேலு என்னைப் பார்த்துவிட்டு என்ன கதாப்பாத்திரம் என்று விசாரித்தார். உடனே அது வேண்டாம், இது தான் நல்லா இருக்கும் என்று அந்த டீ கடை கதாப்பாத்திரத்தை எனக்கு மாற்றிவிட்டார். அந்தக் கதாப்பாத்திரம் பேசும் மொழிநடை, வைத்திருக்கும் மீசை அனைத்தும் வடிவேலுவின் சிந்தனைதான். இன்றுவரை அந்தக் காமெடி பேசப்படுகிறதென்றால் அதற்கு காரணம் வடிவேலுதான். கருப்பசாமி படத்தில்கூட அரிசி கடை காமெடியின் இறுதியில் தராசை பிடித்துக் கொண்டு தொங்குவது எல்லாம் வடிவேலுவின் ஐடியாதான்.
மீண்டும் வடிவேலுவின் கம்பேக் பற்றி…
அது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். வடிவேலுவின் இடத்தை திரையுலகில் யாராலும் நிரப்ப முடியாது. தமிழ் திரையுலகில் வடிவேலு இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வடிவேலுவால் மட்டும் தான் முடியும். இப்போது அவரே மீண்டும் வருவது மிகவும் நல்ல விஷயம். மாமன்னன் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
நீங்கள் வடிவேலுவுடன் நடித்ததைப்போல கவுண்டமணியுடன் இணைந்தும் பல காமெடிகளில் நடித்துள்ளீர்கள். அவரைப் பற்றி சிறப்பான விஷயங்கள் ஏதாவது….
கவுண்டமணி மிகவும் ப்ராக்டிகலான ஒரு மனிதர். அவர்கூட இருந்தால் நேரம் போவதே தெரியாது. சிரித்துக்கொண்டே இருக்கலாம். அவருடைய திரை கதாப்பாத்திரம் தான் அவருடைய உண்மையான குணமே. திரையில் இருப்பதுபோலதான் நேரிலும் இருப்பார். ஒருமுறை நாங்கள் விமானத்தில் சென்றுக்கொண்டிருக்கும் போது ஒருவர் கவுண்டமணியை பார்த்து, “நீங்க ஏன் சார் மயில்சாமி மாதிரி காமெடி டைம் லா பண்ணக்கூடாது?”என்று கேட்டார். உடனே கடுப்பான கவுண்டமணி, “அவன யாரு இந்த மாதிரி ஷோ எல்லாம் பண்ண சொன்னது? இப்போ அவனால தானே இவன்லாம் என்ன கேக்குறான்” என்று சொன்னார். இதுபோல இயல்பாகவே அவர் நக்கல் குணம் கொண்டவர்.
தற்போது சினிமாவிலிருந்து சீரியலில் நடிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். ஜீ தமிழ், கலர்ஸ், சன் டிவி என்று மூன்று தொலைக்காட்சிகளில் மூன்று சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சினிமாவிற்கும் சீரியலுக்குமான வேறுபாடு ஏதாவது இருக்கிறதா?
ஒரு நடிகன் என்பவன், தன் முகத்தை எப்போதும் மக்களிடம் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் மக்கள் முகத்தை மறந்துவிடுவார்கள். அதனால்தான் தற்போது சீரியலிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவிற்கும் சீரியலுக்குமிடையே பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான். சினிமாவிலிருந்து சீரியலுக்குப்போனதால் சற்று கூடுதல் மரியாதையும் கிடைக்கிறது. முன்பெல்லாம் தொலைகாட்சியில் தான் சீரியல் பார்க்க முடியும். ஆனால் தற்போது எல்லா சீரியல்களும் ஓடிடி யிலும் யூடியூபிலும் வந்துவிட்டன. அதனால் எல்லாமே இப்போது ஒரே திரைதான்.
உங்களின் பலவீனம் என்றால், எதை கூறுவீர்கள்?
ஒருமுறை சத்யராஜ் கூறினார், “இவன்கிட்ட எல்லாமே இருக்குது, ஆனாலும் எதோ ஒன்னு மிஸ் ஆகுதே” என்று. அது வாய் தான். வடிவேலு, கவுண்டமணி, சத்யராஜுடன் சேர்ந்து இருக்கும்போது அவர்களை போலவே நக்கல் பேச்சும் இயல்பாக வந்துவிடும். இதனாலேயே பல இயக்குநர்கள் என்னை வைத்து இயக்கும்போது சிரமப்படுவார்கள். அதைதான் கட்டுபடுத்த வேண்டும்.