ஓசூர்: உரிகம் வனச்சரகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து 15-ம் தேதி புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்கள் வருவதை முன்னிட்டு வனவிலங்கு வேட்டையைத் தடுக்க மாவட்ட வனத்துறை சார்பில் 3 சிறப்பு வேட்டைத் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
ஓசூர் வனக்கோட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் பண்டிகை காலத்தில் வன உயிரினங்களை வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு வேட்டைத் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு காப்புக்காடுகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி உத்தரவின் பேரில் பண்டிகை கால வேட்டைத் தடுப்புக் கண்காணிப்பு பணிக்காக சிறப்பு வேட்டைத் தடுப்புக் குழு அமைக்கப்பட்டு வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணிகள் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம், “தமிழ்நாடு – கர்நாடக இருமாநில எல்லையில், காவிரி ஆற்றை ஒட்டியவாறு உரிகம் வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த வனச்சரகத்தில் உள்ள கிராம மக்கள் விடுமுறை நாட்களில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். நடப்பாண்டில் வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.
இந்த விடுமுறை நாட்கள் சமயத்தில் கிராம மக்கள் மற்றும் வெளி ஆட்கள் வன உயிரினங்களை வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 8 பேர் உள்ளனர். இந்த குழுவினர் உரிகம் வனச்சரகத்தில் உள்ள கெஸ்தூர், பிலிகல், மல்லஹள்ளி, தக்கட்டி, உரிகம், மஞ்சுகொண்டப்பள்ளி, கெஸ்தூர் விரிவாக்க காப்புக்காடு ஆகிய 7 காப்புக்காடுகளில் வேட்டை தடுப்பு, வெளியாட்கள் நடமாட்டம் கண்காணிப்பு, வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல தமிழக எல்லையை ஒட்டியுள்ள தப்பகுளி, உக்கினியம் ஆகிய காப்புக்காடுகளில் வேட்டைத் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு கர்நாடகா வனப்பகுதி வழியாக தமிழக வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்யும் பணியும் நடந்து வருகிறது. இந்த பண்டிகை கால வேட்டைத் தடுப்பு பணிகள் ஏப்ரல் 18-ம் தேதி வரை இரவு பகல் என 24 மணிநேரமும் நடைபெறுகிறது” என்று கூறினார்.